Rste

என்ன செய்ய வேண்டும்?

பெருத்த நம்பிக்கைகள்¸ எதிர்பார்ப்புகளுடன் முப்பதாண்டுகளாக நடை பெற்று வந்த தமிழ்த் தேசிய இனத்தின் ஆயுதந் தாங்கிய விடுதலைப் போராட்டம் பிராந்திய¸  சர்வதேச சக்திகளது பெரும் பலத்தின் துணையுடன் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டு காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

சொந்த இன மக்களது ஆதரவில்¸ தனது சொந்தப் பலத்தில் தங்கி நின்று வியத்தகு இராணுவ சாதனைகள் புரிந்து தியாகத்திலும்¸  வீரத்திலும் புதிய பரிமாணங்களைப் படைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்¸  தமிழின விரோத கருத்தியல் கொண்ட இந்திய மத்திய அரசின் காங்கிரசு ஆட்சியாளர்களுக்கும்¸  புதிய உலக ஒழுங்கமைவினை காக்கும் சர்வதேச சக்திகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாததாக அமைந்தது கடந்த கால நிஜம்.

பேச்சு வார்த்தை சமாதானத் தீர்வு என்ற மாயமானைக் காட்டி சகல சதிவலைகளாலும் சூழப்பட்டு தமிழ்த் தேசிய விடுதலைப்போர் சர்வதேச சக்திகளினதும், தமிழ் விரோத காங்கிரசு ஆட்சியாளாகளினதும் துணையுடன் சிங்கள இனவெறி அரசால் இரத்த சகதிக்குள் மூழ்கடிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.

எம் தேசிய விடுதலைப் போரை தலைமையேற்று நடாத்தி தமிழ் மக்களின் பாதுகாப்புக் கவசங்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ பலம் தோற்கடிக்கப் பட்டு அழகிய தமிழீழதேசம் சிறீலங்கா இனவெறி இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.  சிங்கள பௌத்த மகாவம்ச கருத்தியலில் வெறிகொண்டு நிற்கும் சிங்கள தேசம் தமிழ் மக்களது அனைத்து உரிமைகளையும் மறுதலித்து சகல வாழ்வியல், பண்பாட்டு அடையாளங்களையும் சிதைத்து நிரந்தர அடிமை இனமாக, இரண்டாந் தர குடிமக்களாக நடாத்திட வெறிகொண்டு நிற்கிறது.

போர்க்களத்தில் எங்கள் சகோதரிகளை சிதைத்து அவமானப்படுத்திய எதிரி பேச்சுவார்த்தை என்ற பெயரில் எம் இனத்தினை பெரும் அவமதிப்புக்கும், அவமானத்துக்கும் உள்ளாக்கி வருகின்றான்.தமிழீழ பிரதேசங்களை நிரந்தரமாக துண்டாடிவிட, தாயக கோட்பாட்டினை சிதைத்து விட,  சிங்கள குடியேற்றங்கள் விரைந்து நடாத்தப்படுகின்றன.  தமிழீழ வளங்கள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு சிங்கள இனத்தவருக்கு தாரை வார்க்கப்படுகின்றது.  தமிழீழமக்கள் தோற்கடிக்கப்பட்ட மக்களாக, ஏதிலிகளாக, அடிமைகளாக இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கித் தவித்து நிற்பதே இன்றைய யதார்த்தம்.

பெரும் இராணுவ கொத்தளங்களைத் தகர்த்து எதிரிப்படைகளைச் சிதைத்து தரை, கடல், வான் படையணிகளை உருவாக்கி வியத்தகு இராணுவ சாதனைகள் புரிந்த தமிழீழ இராணுவக் கட்டமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளது படையணிகள் தோற்கடிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே இன்றைய உண்மையான நிலைமை.

முள்ளிவாய்க்காலில் எம் இனத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து மீள் எழுச்சி பெற என்ன செய்ய வேண்டுமென்பதே எம் இன விடுதலையை நேசிக்கும் தமிழீழ தேசத்தை மீட்க அவாவுறும் தேச பக்த சக்திகள் முன்புள்ள கேள்வியாகும்.

தமிழீழ தேசம் இனவெறி இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.  இராணுவ யந்திரம், புலனாய்வுக் கட்டமைப்புக்கள் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை எள்ளளவும் வெளிப்படுத்த இடமளிக்காத நிலைமையே நீடிக்கின்றது.  வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் படுகொலைகளை நிகழ்த்தி தமிழீழ தேசத்தை மௌனித்து வைத்திருக்க முயல்கின்றது சிங்கள தேசம்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போர் சந்திக்கின்ற இந்தச் சவாலான தருணத்தில், எம் தேசிய இன விடுதலைப் போரின் நியாயத்தை, உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய சுயநிர்ணய உரிமைக்கு தமிழ்த் தேசிய இனம் உரித்துடையது என்பதை வலியுறுத்தும் வாய்ப்புடையவர்களாக வலிமையுடையவர்களாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் உள்ளார்கள்.

தமிழீழ மக்களது அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்து செல்ல வேண்டிய வரலாற்றுக்கடமை புலம்பெயர்ந்த தேசப் பற்றாளர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.   முள்ளிவாய்க்காலில் எம் விடுதலைப்போராட்டம் பின்னடைவைச் சந்தித்த பின்பு புலம்பெயர் தேசங்களில் தேசிய விடுதலைச் செயற்பாட்டு அரங்கில் பலதரப்பட்ட பிரிவினரின் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தேசியத் தலைவரின் சுட்டுவிரலசைவில் ஒன்றுபட்டு வழி நடந்த புலம்பெயர்தேசங்களின் செயற்பாடுகள் வேறுபட்ட பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றன. தேசியத் தலைவருக்கு அவசரம் அவசரமாக அஞ்சலி செலுத்தி விட்டு இனவிடுதலை தலைமையை கையகப்படுத்த தன்னிச்சையாக முயன்ற ஒரு குழுவினரின் நடவடிக்கைகளுடன் இன்றைய பிரிவுக்கான விதை ஊன்றப்பட்டது.

 “நிதிமோசடி” என்ற விடைதர இயலாத கேள்வியை ஆயுதமாக்கி புலம்பெயர்தேசங்களில் செயற்பட்டு வந்த கட்டமைப்பை, தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களை முடக்கி விடும் பணியில் முள்ளிவாய்க்காலின் பின்பு முளைத்து எழுந்து தேசியம் பேசுபவர்களும், அரசியல் வியாபாரிகளும் கரம் கோர்த்து நிற்பது அவதானம் கொள்ளவேண்டியதொன்று.  இதன் பின்னணியில் சிங்கள தேசத்தின் கருவியாக மாறிப் போயுள்ளவர்களின் தொடர்பாளர்கள், உறவினர்கள் செயற்படுவது இரகசியமானதொன்றல்ல.

விடுதலைப் போரிற்கு துணை நின்று செயற்பட்ட புலம் பெயர் கட்டமைப்புகள் நிகழ்கால, எதிர்கால செயற்பாடுகள் மூலமும், விடுதலைப் போரிற்கு தோள்கொடுத்த தேசப்பற்றாளர்களினை தெளிவுபடுத்தும் வேலைமுறைகளினூடும் தமக்கெதிரான அவதூறுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியது அவர்களினது கடமையாகும்.  எதிர்கால தேசிய விடுதலைப் பாதையின் நலன்களுக்கு அது அவசியமானதும் ஆகும்.

தேசியம், தமிழீழம், தலைவர், மாவீரர்கள் என உச்சரித்து கொண்டு தேசியத்தை தனது நலன்களுக்கு பாவிக்கும் அரசியல் பிரமுகர்கள்,  தேசியத்தை விற்றுப் பிழைக்கும் அரசியல் வியாபாரிகள், சிங்கள பௌத்த இனவாத சித்தாந்தத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் கைப்பாவைகளின் “கோத்தபாய” நடவடிக்கையை முன்னெடுக்கும் துரோக சக்திகள் இவற்றின் கலவையாக, கதம்பமாக ஒரு தரப்பும்.

தேச விடுதலையை உளமார நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சனநாயக மிக்க, தூய்மையானதொரு, அரசியல் பலமிக்க கட்டமைப்பை உருவாக்கிட இயலாததொரு நிலைமையைக் கொண்டதாக மற்றுமொரு தரப்பும் என இன்றைய புலம் பெயர் தேசங்களின் நிலைமை வெளிப்படுகின்றது.

எத்தகைய இடர்வந்தபோதும் தன் இனத்தின் விடுதலை இலட்சியத்தில் இம்மியளவும் சமரசம் செய்யாது எம் இனத்தைக் காத்து நின்ற தேசியத் தலைவரின் சிந்தனைகளைத் தாங்கி;, சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து தமிழீழ தேசத்தை மீட்டு சுதந்திர நாடாக மலரச் செய்ய உழைப்பதற்கு அவாவுறும் தேசப் பற்றாளர்கள் ஒன்றிணைய வேண்டியது இன்றைய உடனடித் தேவையானதொன்று.

புலம்பெயர் தேசங்களில் தூய்மையானதும், சனநாயக மிக்கதும் கருத்துப் பரிமாறல்கள், அரசியல் கற்கைகள் மூலம் தன்னைச் செழுமைப்படுத்தும் ஓர் அரசியல் கட்டமைப்பு உருவாகுவதும் தமிழீழ தேச விடுதலைக்கான செயல்பாதைகளை கண்டடைவதும் இன்றைய முதன்மைப் பணியாக தமிழ்த் தேசப் பற்றாளர்கள் முன்னுள்ளது.

தமிழ்த் தேசிய இனம் தன் பலத்தைக் கண்டடையவேண்டும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழுமைமிக்கதொரு வாழ்வியலை, பண்பாட்டினை கொண்ட பழங்குடி இனம்.

உலகெங்கும் பரவி பரந்து விரிந்த 10 கோடி மக்கள் நாம். இழப்பதற்கு எதுவுமில்லை! வெல்வதற்கு அழகிய தமிழீழ தேசம் உள்ளது!

     சிறு துளிகள் பெரு வெள்ளமாகும்

     பெருவெள்ளம் காட்டாறு ஆகும்

     திரள்வோம்,  வெல்வோம்.

-    அருள்மொழி.

தை 23’

Leave a Reply

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

January 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins