Rste

நூறுவருடம் ஆகின்ற ‘தேசியத்தின் ஈட்டி’ – ச.ச.முத்து

சில நாட்களுக்கு முன்னர் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் அல்லது ANC என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராகவும் கறுப்பு இனமக்களின் விடுதலைக்காகவும் போராடிய அமைப்பு தனது நு£றாவது ஆண்டை நிறைவை வரலாற்று பெருமிதத்துடன் கொண்டாடியது. அந்த நிகழ்வுக்காக உலகம் முழுதும் இருந்து எல்லா தரப்பினரும் கலந்து கொண்டனர். நாடுகளுக்கு உரிய சம்பிரதாய பூர்வமான ஒப்புக்கு அழைப்பிதழ் சில இனவெறி நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு இருந்தாலும், இதில் மிகமுக்கியமானது என்னவென்றால் விடுதலைக்கான குரலை ஓங்கி ஒலிக்கும் அமைப்புகளையும் முக்கியமானவர்களையும் இந்த நிகழ்வில் அழைத்திருந்தது ஆகும்.

சிங்கள பேரினவாதத்தை சினம் கொள்ளவைத்த ஒரு நிகழ்வாக இந்த ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் நூற்றாண்டு விழாக்களில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போரையும் அவர்கள் விசேட விருந்தினர் தரத்தில் அழைத்திருந்தது இருக்கிறது.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் காலகாலமாக கரிசனையுடனும் ஈடுபாட்டுடனும் நடந்துவரும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் அதன் தொடர்ச்சியாகவே இப்போதைய உலகதமிழர் பேரவையையும் அழைத்திருக்கிறது. இந்த நூற்றாண்டு நிகழ்வை புறக்கணிக்கபோவதாக சிங்கள அரசு ஆரம்பித்தில் அறிவித்து இருந்த போதிலும், மீசையில் பட்டிருந்த மண்ணை மெல்ல துடைத்தபடி இறங்கிவந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் ஆரம்பித்த முதல் வாரங்களிலேயே சிங்களத்து ஏற்பட்ட பெரிய சறுக்கலாக இது அமைந்துவிட்டது.

இனிவரும் மாதங்கள் இதன் தொடர்ச்சியாக இன்னும் சிக்கலாகவும் இராஜதந்திர வீழ்ச்சியாகவும் மொத்தமாக புறக்கணிக்கப்படும் ஒரு நிலையை உருவாக்கிவிடுமோ என்று இப்போதே சிங்கள ஊடகங்களும் சிங்கள அரசும் கதிகலங்கி யோசிக்க ஆரம்பித்துவிட்டன. இன்னும் நிறவெறிக்கொள்கையுடன் இருக்கும் வெள்ளையர்களுக்கு ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் மீது இருக்கும் கோபத்தையும் வன்மத்தையும்விட பலமடங்கு அதிகமான கோபம் இப்போது சிங்கள அரசுக்கு ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் மீது வந்திருக்கும்.

70களின் இறுதிப் பகுதியில் இருந்தே ஈழ விடுதலை அமைப்புகளுடன் ஆழமான அபிமானமும் கவனமும் வேலைத் திட்ட வலைப்பின்னலை கொண்டிருந்த ஆபிரிக்க கொங்கிரஸின் வரலாறை சுருக்கமாகத்தன்னும் தெரிந்து வைத்துகொள்வது தேவையாகிறது. இதன்மூலம் தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராட்டமும் அதன் விடுதலை அமைப்பான ஆபிரிக்க தேசிய கொங்கிரசுக்கும் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் இருக்ககூடிய அடிப்படை ஒருமிப்புகளையும் வேறுபாடுகளையும் புரிந்துகொள்ளவும் முடியும். இனி சுருக்கமான ஒரு ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் வரலாற்றுக்கு போவோம்…

ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்கள் வருவதற்கு முன்னர் எப்படி இலங்கைத்தீவின் தமிழர் நிலங்கள் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டுவந்ததோ அதனைபோலவே 1752ல் ஒல்லாந்து காலனி ஆட்சியாளர்களிடம் தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வீழ்ச்சியடைந்ததோ அதற்கு முன்னர் அங்கும் பல தேசிய இனங்கள் தமக்கே உரிய சுயாட்சியுடன் ஆன ஆட்சியுரிமையுடன் இருந்திருக்கின்றனர்.சுயேஸ் கால்வாய் அகழ்வதற்கு முன்னர் உலக கடல் வணிகத்தின் மிகமுக்கிய முனையாகவும் இந்து சமுத்திரத்தில் இருந்து அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு செல்லும் வழிக்கான முக்கிய வழித்தடமாகவும் தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கைமுனை இருந்திருக்கிறது.

இதுமட்டும் அல்லாமல் மிகவும் வளங்களும் கனிமங்களும் நிறைந்திருந்த தென்னாபிரிக்கா காலனி ஆட்சியாளர்களின் சொர்க்கபுரியாகவும் இருந்திருக்கிறது. ஆனால் 1752ல் முதலில் வந்திறங்கிய ஒல்லாந்தருடன் மிக நீண்ட ஆண்டுகளுக்கு தென்னாபிரிக்க மக்கள் யுத்தத்தையும் கிளர்ச்சிகளையும் நடாத்தினர். எமது தமிழ்மண் எப்படி ஆயுத பலத்தால் போத்துக்கேயரின் காலனியாக மாறியதோ அதனைப் போன்றே தென்னாபிரிக்காவும் ஒல்லாந்தரின் காலனியாக மாறிற்று. இலங்கைத்தீவின் கண்டி மன்னன் தனது ஆட்சியுரிமையை பிரித்தானியரிடம் இழந்த 1815 அதே ஆண்டில்தான் தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கைமுனையும் பிரித்தானியரிடம் வீழ்ந்தது.

ஆடுகளை வேட்டையாட வந்த ஓநாய்களுக்கிடையில் சண்டை வருவதைப்போல தென்னாபிக்காவின் கனிமவளங்களையும், தங்கம், வைரம் கொட்டும் மண்ணையும் ஆக்கிரமிக்கும் பலப்பரீட்சை ஒல்லாந்தருக்கும் பிரித்தானியருக்கும் இடையில் நடைபெற்றது. ஆனால் ஒருகட்டத்தில் ஐரோப்பிய காலனி நலனை முன்னிட்டு இரண்டு பேரும் இணைந்தே தென்னாபிரிக்காவின் மக்களை அடக்கி அங்கிருக்கும் வளங்களை உறிஞ்ச ஆரம்பித்தனர். 1910ம் ஆண்டு தாங்கள் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் மாகாணங்களையும் சிறுசிறு மன்னர் நிலங்களையும் இணைத்து சட்டவிரோதமாக வெள்ளையர்கள் இனவாத அரசை பிரகடனம் செய்தனர். தமது பாரம்பரிய வளமான நிலங்களில் இருந்து ஆபிரிக்க மக்கள் வெளியேற்றப்பட்டு வளமற்ற வரண்ட நிலங்களில் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர்.

கொடுமையான நிறவெறிச்சட்டங்களும் அநீதிகளும் மிகவும் துன்பத்துள்ளும் வறுமைக்குள்ளும் அந்த மக்களை தள்ளியது. அரசியல் உரிமைகளும், வாழும்உரிமைகளும் பறிக்கப்படும்போது இயல்பாகவே வரலாற்று தேவையாக எமது ஈழத்திலும் போராட்ட அமைப்புகள் உருவானதைபோலவே 1912ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி தமது உரிமைகளை மீடட்டெடுக்க ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் உருவாக்கங்கொண்டது.

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக ஆரம்பத்தில் உருவான அமைப்புகள் 50களின் ஆரம்பத்தில் எப்படியாக கோரிக்கைகளையும் சலுகைகளையும் சிங்கள அரசுகளிடம் வைத்தார்களோ அதனைப்போலவே ஆபிரிக்க தேசிய கொங்கிரசும் ஆரம்பித்தில் உரிமைகளையும், சீர்திருத்தங்களையும், சலுகைகளையும் வேண்டி கோரிக்கைகளை வெள்ளை ஆட்சியாளர்களிடம் வைத்தது. இதிலும் சிங்கள அரசு நடந்துகொண்டதை போலவே வெள்ளையர் அரசம் ஆபிரிக்க தேசிய கொங்கிரசின் கோரிக்கைகளை உதாசீனம் செய்து அடக்குமுறையை இன்னும் தீவிரமாக்கியது. உலக விடுதலைப் போராட்டங்களில் காணப்படும் வரலாற்று திருப்புமுனையான மென்முறைப் போராட்ட முறையில் இருந்து ஆயுதந்தரித்த எதிர்ப்பு என்ற நிலையை அப்போதுதான் தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டமும் தொட்டது. அதுகூட எமது தமிழீழ வரலாற்றில் இருப்பது போலவேதான்.

1944ல் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் இளைஞர் பேரவை உருவாகியது. எமது தேசத்திலும் மென்முறை நாடாளுமன்ற பாதைகள் மிகமோசமாக சிங்களத்தால் ஆயுத முனையில் சிதைக்கப்பட்டபோது அந்த மென்முறை போராட்ட சக்திகளில் இருந்தே இளைஞர் பேரவை உருவானது. சாத்வீகமுறை போராட்டங்கள் அரச ஆயுதப் படைகளால் ஒடுக்கப்படும்போது எழும் இயல்பான தீவிர எண்ணமாகவே இது இருந்தது. இந்த ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் இளைஞர் பேரவையிலிருந்தே மகத்தான தலைவர்களாக பின்னாளில் உலகம் அறிந்த நெல்சன் மண்டேலா, ஒலிவர் டம்போ ஆகியோர் உருவாகினார்கள்.

தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் திசையையும் அதனது வழிமுறையையும் பெரிய அளவில் திருப்பிய சம்பவமாக 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழராய்ச்சி மாநாட்டு முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் 11 தமிழ் மக்கள் சிங்கள ஆயுதப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இருப்பதுபோலவே தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் ஆபிரிக்க தேசிய கொங்கிரசின் போராட்டப் பாதையிலும் 1960ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி ‘சார்ப்வில்லே’  ( Sharpeville) என்ற இடத்தில் சாத்வீகப் போராட்டம் ஒன்றுக்காகக்கூடிய ஆபிரிக்க மக்கள் மீது வெள்ளை ஆட்சியாளர் நடாத்திய காட்டுமிராண்டித் தாக்குதலில் 67 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவமானது இருந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னரேயே மக்கள் எழுச்சி ஏற்பட்டது. வெள்ளையின அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களைப் பிறப்பித்தது.

ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் இயக்கத்தைத் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. நாம் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதற்கிணங்க எதிரியின் ஆயுத அடக்குமுறைக்கெதிரான ஆயுத எதிர்ப்பு இயக்கமாக, விடுதலைப் போராட்டத்துக்கான ஆயுத அமைப்பாக ஆபிரிக்க தேசிய கொங்கிரசின் இராணுவப் பிரிவாக ‘தேசியத்தின் ஈட்டி’ (Spear of the Nation) 1961ல் உதயமாகியது.

ஆபிரிக்க மக்களின் பாரம்பரிய போர்ச் சின்னமான ஈட்டியைப் பெயரில் கொண்ட இந்த இராணுவ அமைப்பின் முதலாவது தளபதியாக நெல்சன் மண்டேலா பொறுப்பேற்றார். வரலாற்றில் இதனை ஒத்ததாகவே எமது தேச விடுதலைப் போராட்டத்திலும் வரலாற்று தேவையாக தேசியத் தலைவரால் தமிழ்ப் புதிய புலிகள் உருவாக்கம் பெற்றதும் அதுவே பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் இருக்கின்றது. ஒடுக்குபவன் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான ஒடுக்குதலையும், அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிடுவது போலவே, அதற்கு எதிரான விடுதலை இயக்கங்களும் ஒரே மாதிரியான மாற்றங்களுக்கு உள்ளாகவே உருவாகின்றனவா…

அடுத்த வாரமும் 

இன்னும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

Leave a Reply

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

January 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Photo Gallery