கலாம் அய்யா நீங்களுமா? மறக்க முடியுமா ?
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் ஆகிய மும்மொழியை மையப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012 ஐ சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
இப் பிரகடனத்த்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கெடுத்துள்ளார்.
போர் ஓய்வுக்கு பிந்திய இலங்கைத்தீவின் , கவர்ச்சிகரமான சொல்லாகிவிட்ட இன நல்லிணக்கம் எனும் மாயைக்குள், தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை புதைக்கின்ற, சிங்கள தேசத்தின் நிகழ்சி நிரலில், இந்த மும்மொழி முழக்கமும் அமைகின்றது.
இந்தியாவைக் கட்டியெழுப்ப இளைஞர்களே கனவு காணுங்கள் எனும் அறைகூவல், அப்துல் கலாமின் அடையாள மந்திரமாக உள்ள நிலையில், சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்க இருக்கின்றேன் என, இந்தியாவில் இருந்து வெளிவரும் இந்து நாளேட்டுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இணக்கம் மற்றும் செழிப்புக் கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு பக்க தலைவர்களையும் தான் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயணம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்த அப்துல் கலாம், எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை. குறிப்பிட்ட எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் பயணமாக சிறிலங்காவுக்கு சென்றுள்ள அப்துல் கலாம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.












